அவினாசியில் பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்

பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து அவினாசியில் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று 5-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரியாயி பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.

இங்கு வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் இன்று 5 -வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

இதனால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பள்ளியை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிரச்சினையில் அரசு உடனே தலையிட்டு அவர்களை பணிக்கு வர அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.பெற்றோர் போராட்டத்தால் அவினாசியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் 17 நடுநிலைப் பள்ளி, 61 ஆரம்ப பள்ளி,2 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ஒரு சிலரே இன்று வேலைக்கு வந்து இருந்தனர். இதனால் மாணவர்களும் குறைவாகவே வந்து இருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!