ராகுலை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் – தேவேகவுடா

ராகுலை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவருமான தேவேகவுடா கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவருமான தேவேகவுடா ஈடுபட்டு வருகிறார்.

இது சம்பந்தமாக அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

கேள்வி:- எதிர்க்கட்சி கூட்டணி சம்பந்தமாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, வலுவான ஆட்சி வேண்டுமா? பலவீனமான அரசு வேண்டுமா? என்று கேட்டு இருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி அணியை சந்தர்ப்பவாத, நகைப்புக்குரிய அணி என்று கூறி இருக்கிறாரே?

பதில்:- எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினைகள் என்ன என்பதை உணர்ந்து தீர்வு ஏற்படுத்திக்கொண்டால் மோடி போன்றவர்கள் இது போன்ற விமர்சனங்களை செய்யும் நிலை ஏற்படாது.

இந்த நாட்டின் மக்கள் நிலையான அரசைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க் கட்சியினர் தங்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு நிலையான அரசை ஏற்படுத்துவது சம்பந்தமாக ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

எப்படி அந்த அரசை 5 ஆண்டுகள் நீடிக்க செய்வோம் என்ற வி‌ஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மதசார்பற்ற நிலைக்கும், ஜனநாயகத்துக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து விவாதித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களுக்கும் இதில் தீர்வுகாண வேண்டும். அதை காங்கிரஸ் முன்னின்று செய்ய வேண்டும். ஆனால், காங்கிரசுக்கும், பிராந்திய கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் மோடி விமர்சிக்கிறார்.

நாட்டின் பாதுகாப்பு, அனைத்து அரசியல் சாசன அமைப்புகள் ஆகியவற்றை அழிக்கும் முயற்சியில் மோடி ஈடுபட்டு வருகிறார். அதை தடுப்பதற்கு எதிர்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம்.

கே:- எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் எது தடையாக உள்ளது?

ப:- மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி 10 இடங்களை தான் கேட்டார். ஆனால், அதைக்கூட காங்கிரஸ் விட்டு கொடுக்கவில்லை. பின்னர் அவர் தனித்து நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 6 இடங்களில் வென்றுள்ளார்.

அப்போதே காங்கிரஸ் விட்டு கொடுத்து இருந்தால் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருக்காது. இதன் காரணமாகத்தான் மாயாவதி உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் சேர்ந்து தனி கூட்டணியை ஏற்படுத்தி விட்டார்.

காங்கிரஸ் அங்கு தனியாக போட்டியிடும் நிலை உருவாகி இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலை உருவாகாமல் பார்த்து இருக்கலாம்.

இப்போதுகூட ஒன்றும் பிரச்சினை இல்லை. நினைத்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையலாம். குமாரசாமி பதவி ஏற்பு விழாவின்போது அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தேன். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவது நல்லது.

கே:- கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஒன்றிணைவதற்கு இப்போது வாய்ப்பு இருக்கிறதா?

ப:- நிச்சயமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் அணுகி ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். காங்கிரஸ் அதை முன்னெடுத்து சென்றால் அவர்களும் இறங்கி வருவார்கள். ஒரு சரியான உருவகத்தை ஏற்படுத்த முடியும்.

கே:- எதிர்க்கட்சி அணியில் யார் பிரதமர்? என்று பாரதிய ஜனதா கேள்வி விடுக்கிறது.

ப:- ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பது இயற்கையான ஒன்று. எங்களில் யாரும் அவருக்கு போட்டியாக இல்லை. அந்த வகையில் காங்கிரஸ் தனது செயல்பாட்டை முழுமையாக்கி கொள்ள வேண்டும்.

கே:- பிரியங்கா வருகையால் காங்கிரஸ் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?

ப:- ராகுல்காந்தியை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் என நான் கருதுகிறேன். அவருடைய தோற்றம், சில வகை நடவடிக்கைகள் அவரது பாட்டி இந்திராகாந்தி போலவே இருப்பதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

பிரியங்காவின் வருகை நிச்சயம் கட்சிக்கு பெரிய உதவியாக இருக்கும். அவர் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!