நிதி வழங்கிய மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஓய்வூதியப் பணத்தில் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயை, தலைநகரை உருவாக்குவதற்காக வழங்கிய மூதாட்டியின் காலில் விழுந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு வணங்கினார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அனந்தபூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுகதிரியில் உள்ள செர்லோபள்ளி அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்து வைத்து உரையாற்றினார். அந்தவேளையில் மேடைக்கு வந்த 87 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்தார்.

அதை வாங்கிய சந்திரபாபு நாயுடு, “நீங்கள் யார்… இந்த பணம் எதற்கு..?” எனக் கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி, “எனது பெயர் முத்தியாலம்மா. நான், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தில் வசிக்கிறேன். மாநிலத் தலைநகர் அமராவதியை விரைவில் உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக, எனது ஓய்வூதியப் பணத்தில் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த 50 ஆயிரம் ரூபாயை முதல்வர் நிதிக்கு வழங்குகிறேன்” எனக் கூறினார்.

இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த முதலவர் சந்திரபாபு நாயுடு, அந்த மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கி, தன்னை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர், தள்ளாத வயதிலும், தனது மருத்துவச் செலவுக்குகூட வைத்துக்கொள்ளாமல், மாநில தலைநகர் அமைக்க நிதியுதவி வழங்கிய மூதாட்டி முத்தியாலம்மாவை வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், “இவரைப்போல் மக்கள் அனைவரும் அமராவதிக்கு நிதியுதவி செய்ய முன்வர வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!