புலிகளின் காலத்து கொள்கையை கைவிட்டு விட்டது கூட்டமைப்பு! – சுரேஸ் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளின் காலத்து கொள்கையை முன்னெடுத்துச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டது என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

விடுதலைப் புலிகள் மௌனிக்கப்படுவதற்கு முன்னரும், மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்திலும் ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திற்கும் எதிராகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்து வந்தது. ஆனால் தேசிய அரசாங்கம் என்று சொல்லக்கூடிய மைத்திரி ரணில் கூட்டு அரசாங்கத்தை கூட்டமைப்பினர் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் கண்மூடித்தனமாக ஆதரித்தனர்.

அன்று பாதுகாப்பு அமைச்சுக்கு பல்லாயிரம் கோடிகள் ஒதுக்குவதாகவும் தமிழரை அழிக்கவே இத்தொகை பயன்படுத்தப்படுவதாகவும் நாம் எடுத்துக் கூறி, வரவு செலவுத் திட்டங்களை எதிர்த்தோம். ஆனால் யுத்தம் இல்லாத இன்றைய காலகட்டத்திலும் வருடாந்தம் பாதுகாப்பு நிதி அதிகரிக்கப்பட்டே வருகின்றது.எதிர்வரும் மார்ச் மாதம் வரவுள்ள வரவு செலவுத் திட்டத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி அவர்கள் ஆதரிப்பார்கள் என்பதும் வெளிப்படையானது.

இந்த பாதுகாப்பு நிதியினூடாக மேலும் பல பௌத்த ஆலயங்கள் நிறுவப்படும். புதிய சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படும். இராணுவத்திற்கான கோட்டை உருவாக்கப்படும். தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் பறிமுதல் செய்யப்படும்.ஆனால் இவையெல்லாம் நடைபெற்றாலும் கூட எந்தவிதமான நிபந்தனைகளுமில்லாமல், தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டங்களை ஆதரிப்பது என்பதுதான் இவர்களுடைய இராஜதந்திரமா அல்லது தமிழ் மக்களின் இருப்பை அழிப்பதற்காகக் காட்டும் பச்சைவிளக்கா?” என கேள்வியெழுப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!