‘எங்களை வெற்றிபெறச் செய்தால் அனைத்து விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்’ – ராகுல் காந்தி!

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் முதல் முறையாக பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசு பிரதமர் மோடியை போலவே வெற்று வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை வெற்றிபெறச் செய்தால் விவசாயிகளின் துயரம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல பிரச்சினைகளை தீர்ப்போம். 2014 தேர்தலில் மோடி மிகப்பெரிய வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்தார். ஆனால் பிரதமரான பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி அவர் கவலைப்படவில்லை.

ஆனால் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் மாதத்துக்கு குறைந்தபட்ச வருவாயாக ரூ.10 ஆயிரம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கிறேன். மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு தினமும் ரூ.17 தருவதாக அறிவித்து அவர்களை இழிவுபடுத்தி உள்ளது. மோடி தனது தொழில் அதிபர் நண்பர்களான அனில் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடியும், நிரவ் மோடிக்கு ரூ.33 ஆயிரம் கோடியும், மெகுல் சோக்சிக்கு ரூ.30 ஆயிரம் கோடியும் கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது உண்மையிலேயே அவர்களை இழிவுபடுத்துவதாகும். விவசாயிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்து பெரிய வியாபாரிகளின் பாக்கெட்டுகளை நிரப்புவது தான் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பயிர் காப்பீட்டு திட்டத்தின் நோக்கம்.

ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்துள்ளது. மத்தியில் காங்கிரசை வெற்றிபெறச் செய்தால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதோடு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஊக்கப்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

கூட்டத்தில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் கமல்நாத், பூபேஷ் பாகெல், அசோக் கெலாட், கூட்டணி கட்சி தலைவர்கள் ராஷ்டிரீய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ், முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்வி நிலையங்கள் அளவில் இடஒதுக்கீடு என்பதை துறைகள் அளவில் இடஒதுக் கீடு வழங்கும் நடைமுறை குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுபற்றி ராகுல் காந்தி டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

முதலில் மோடி இடங்களை குறைத்ததன் மூலம் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் கல்வி வாய்ப்புகளை பறித்தார். கல்வி உதவித்தொகைகளை நிறுத்தினார். ரோஹித் வெமுலா போன்ற இளைஞர்களை தாக்கினார்கள். இப்போது 13-வது புள்ளி பட்டியல்படி அவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் உள்ள வேலைவாய்ப்புகளையும் நிறுத்திவிட்டார். அவரது ஒரே மந்திரம், முக்கிய இடங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட பிரிவினரை நீக்குவது, தொழில் அதிபர் நண்பர்களை வளர்ச்சி அடையச் செய்வது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!