கடனட்டை மோசடியில் ஈடுபட்ட 2 சீனர்கள், ஒரு ருமேனியர் கைது!

அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஏ.ரி.எம் இயந்திரங்களில் போலி கடன் அட்டை , வரவு அட்டைகளை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் பண திருட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக பதிவான சம்பவங்களை மையபப்டுத்தி இந்த விசேட விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் இடம்பெறும் விரிவான விசாரணைகளில், கோட்டை – செத்தம் வீதி, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய மூன்று இடங்களில் இவ்வாறு தானியக்க பண இயந்திரங்களில் போலி அட்டைகளை பயன்படுத்தி பணம் திருடிய சந்தேக நபர்கள் மூவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் கூறினார்.

இரு சீனர்கள், ஒரு ரூமேனியருமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தானியக்க பண இயந்திரங்களில், அட்டைகளை உட்செலுத்தும் பகுதிகளில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் நுட்பமான இயந்திரம் ஒன்றினை பொருத்தும் சந்தேக நபர்கள், அதனூடாக அந்த தானியக்க பண இயந்திரங்களில் பணம் எடுப்போரின் அட்டைகள் குறித்த இரகசிய தகவல்களை தமது தொலைபேசிகளுக்கு பெற்று, போலி அட்டைகளை தயாரித்து இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்ப்ட்ட மூவரிடம் இருந்தும் 200 கடன், வரவட்டைகளும் 12 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணமும் சி.ஐ.டி.யினரால் மீட்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!