மகிந்தவினால் தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியாது! – அடித்துச் சொல்கிறார் ரணில்.

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் என்று கூறிய மஹிந்த ராஜபக்ஷவினால், தமிழர்களுக்கான தீர்வை வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் மஹிந்த கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். ஆனாலும் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர். தமது ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ஷ, இறுதியில் அவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றியிருந்தார்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த செய்த மஹிந்த, எந்த முகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப் போகின்றார்? புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு விரைவில் கூடும். அதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எனவே, எத்தனைத் தடைகள் வந்தாலும், புதிய அரசியலமப்பினைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடப்போவதில்லை” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!