பால்மாவின் தரம் தொடர்பாக தேவையற்ற அரசியல் பிரசாரம்! – அமைச்சர் ராஜித குற்றச்சாட்டு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் தரம் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு சோதனையிலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தப் பொருட்களும் இல்லையென நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

” நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பால் மா பற்றி பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிலர் இதனை அரசியல் மயப்படுத்தப் பார்க்கின்றனர். இது விஞ்ஞானபூர்வமான தேயன்றி அரசியல் ரீதியானதல்ல. இது போஷாக்குடன் தொடர்புபட்ட விடயம். அதனைவிடுத்து பால் மா நாட்டுக்கு தேவையா? அல்லது இல்லையா? என்பதைப் பற்றிய விடயமல்ல.

பால் மா கம்பனிகள் மீதான அக்கறையால் பால்மாவை, அமெரிக்கா சிபாரிசு செய்த போதும் பிறந்த சிசுக்களுக்கு தாய்ப்பாலே சிறந்தது என்பதனை அங்கீகரிப்பதற்காக அமெரிக்காவுக்கு நான், பாரிய அழுத்தம் கொடுத்திருந்தேன்.

புகையிலைப் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக புகையிலை மீது 90 சதவீத வரியை விதித்துள்ளோம். சீனி பாவனையை குறைப்பதற்காக ஒவ்வொரு ஒரு கிராம் சீனியிலும் 50 சதவீத வரியை அறவிடுகின்றோம். இனிப்பு பானங்களிலுள்ள சீனியின் அளவை 10 சதவீதத்தால் குறைத்துள்ளோம்.

அத்துடன் பல மருந்துகளின் விலைகளை குறைத்துள்ளோம். நாம் எமது சேவையை மிகுந்த அர்ப்பணிப்புடனேயே முன்னெடுத்துள்ளோம். மேடைகளிலும் செய்தியாளர் மாநாட்டிலும் குற்றம் சுமத்துவது இலகுவான விடயம். ஆனால் அனைத்து விடயங்களையும் மிகவும் ஆழமாக ஆராய்ந்தே முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாம் மருந்து விலைகளை குறைக்கும்போது பல வெளிநாட்டு தூதுவர்கள் என்மீது தாக்குதல் நடத்த முனைந்தனர். எனினும் எமது இந்த முயற்சிக்கு சர்வதேச தரம் கொண்ட ஆவணங்களே உதவி புரிந்தன. ஆரம்பத்தில் அவர்கள் அதனை 05 மில்லியன்களுக்கு வழங்க முன்வந்த போதும் பின்னர் அதனை இலவசமாக வழங்கினர். நாம் இது தொடர்பான அனைத்து விடயங்களையும் நாட்டு மக்களின் நன்மைக் கருதி மிகுந்த அவதானத்துடன் முன்னெடுத்திருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“பால்மா இறக்குமதியை தொடருவதா? அல்லது நிறுத்துவதா? என்பது தொடர்பில் அரசாங்கமே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள தேவையின் 10 சதவீதப் பால் உற்பத்தியே எம்மிடம் உள்ளது. இந்நிலையில் பால்மா இறக்குமதியை நிறுத்தினால் எமது பிள்ளைகளின் போஷணை தரத்துக்கு என்ன நடைபெறும்? சிலர் பால் தேவையில்லையென நினைக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் பாலுக்கு பதிலாக சீஸ் மற்றும் பட்டரை பயன்படுத்தலாம். ஆனால் ஏழை மக்களுக்கு இலகுவாகவும் இலாபமாகவும் கிடைக்கக்கூடிய ஒரே புரத உணவுப் பொருளென்றால் அது பாலாகத்தான் இருக்க முடியும். இவற்றை கருத்திற் கொண்ட பின்னர் பால் மா இறக்குமதியை நிறுத்த யார் வேண்டுமென்றாலும் களத்தில் இறங்குங்கள்,” என்றும் அமைச்ர் கூறினார்.

சுகாதார சேவைகளின் (பிரதான உணவு அதிகாரசபை) பணிப்பாளர் நாயகம் டொக்டர். அனில் ஜாசிங்க கருத்து தெரிவிக்கும்போது, இறக்குமதி செய்யப்படும் பால்மா சரியான போஷணை தரத்தில் இருக்கிறதா? என்பதை தீர்மானிப்பதே முக்கியமான கடமையாகும். இது அரசியல் சம்பந்தப்பட்ட விடயமல்ல. பால்மாவுக்கு பதிலாக தூய பசும்பாலை மக்கள் அருந்துவதனை பார்ப்பதற்கே அமைச்சு விரும்புகின்றது. எனினும் பசும்பால் உற்பத்தி போதுமான அளவு இல்லாததால், அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே பால் மா இறக்குமதி செய்யப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

உலக நாடுகளிலேயே பிறந்த சிசுவுக்கு தாய்ப்பால் வழங்குவது இலங்கையில் 80 சதவீதமாகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது இலங்கை அரசாங்கத்தின் முயற்சியாலன்றி சாதாரணமாக இடம்பெற்ற விடயமல்ல என்றும் இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் எவ்வித கலப்படமும் இல்லையென்பது நிரூபிக்கப்பட்டுள்ள தென்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!