மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் குறித்த ஆய்வு அறிக்கை விரைவில்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தொடர்பான றேடியோ கார்பன் அறிக்கை மிக விரைவில் கிடைக்கும் என்று புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதைகுழியில் இருந்து 320இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட போதும், அவற்றில் தெரிவு செய்யப்பட்ட 6 எலும்புக்கூடுகளின் மாதிரிகளே, புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.

அங்கு மேற்கொள்ளப்பட்ட, எலும்புக்கூடுகளின் காலத்தைக் கணிக்கும் ஆய்வுகளின் பின்னர், 5 மாதிரிகள் தொடர்பான அறிக்கைகள், நிறுவனத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தன.

அவற்றை தரவிறக்கம் செய்து, சட்ட மருத்துவ அதிகாரி இறுவட்டு ஒன்றின் மூலம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை சமர்ப்பித்திருந்தார்.

எனினும், ஆய்வகத்தின் எழுத்துமூலமான அறிக்கை நீதிமன்றத்துக்கு நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என்று நீதிவான் அதனை நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று இது தொடர்பான உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதாகவும் நீதிவான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துடன் தொடர்பு கொண்டு, எழுத்து மூலமான ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்துக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்புமாறும், அதன் பிரதியை தனக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாக, சட்டமருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!