பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது. எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பறந்து வந்த பாகிஸ்தான் நாட்டின் ஆளில்லா உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச எல்லைக்கு அருகாமையில் நங்காடாத் கிராமத்தின் அருகே இன்று காலையில் இந்த ஆளில்லா விமானம் விழுந்தது. எல்லை தாண்டி வந்ததால், இந்திய ராணுவம் அதனை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என தெரிகிறது.

விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானத்தின் பாகங்களை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!