சிவராத்திரி வரவேற்பு வளைவு உடைக்கப்பட்டதால் திருக்கேதீச்சரத்தில் பதற்றம்

மன்னார் – திருகேதீச்சர ஆலயத்தில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வீதி முகப்பில் இருந்த அலங்கார வளைவை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, அதனை மாற்று மதத்தினர் சிலர் பிடுங்கியெறிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருக்கேதீச்சர ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது. அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் நேற்று ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த, மாற்று மதத்தைச் சேர்ந்த சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தினர். கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொறுக்கி பிடுங்கி எறிந்தனர்.

சம்பவம் பற்றி மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் ஒருவர் கூட சம்மந்தப்பட்ட இடத்திற்கு செல்லவில்லை எனவும் மக்கள் தெரிவித்தனர். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனாலும் எவரும் கைது செய்யப்படவில்லை என அறிய முடிகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி கருத்து தெரிவித்த போது இந்த பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது இதில் வளைவுகள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்றும், இந்த வளைவுகளை பிடுங்கி எறிந்தவர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனைவரையும் அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு கட்டளை இட்டனர்.

இது சம்பந்தமாக கத்தோலிக்க மக்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த பாதை நீதிமன்ற வழக்கில் உள்ளதாகவும் கொங்ரீட் போட்டது தமக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறினார்கள்.

இது சம்பந்தமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கும் போது இந்த பாதைக்கு வழக்குகள் இல்லை, பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வளைவு துருப்பிடித்ததால் புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது இந்த செயலை செய்தார்கள். அடுத்தபடியாக இந்த வீதியில் வளைவு அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதிக்கடிதம் உள்ளதாக தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நாங்கள் கிறிஸ்தவர்களை மதிக்கின்றோம். அவர்கள் எங்கள் இரத்த உறவுகள் அதனால் அவர்கள் எங்கள் கடவுளின் வளைவுகளை பிடுங்கிய போதும் அமைதியாக நின்றோம் . இனக்கலவரத்தால் நம் தமிழ் சமூகம் பாரிய பின்னடைவையும் அழிவையும் சந்தித்தது உறவுகளுக்கள் மதக்கலவரத்தை நாம் விரும்பவில்லை என்று தெரிவித்தார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!