பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிக்க மகிந்த அணி, ஜேவிபி கங்கணம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஜேவிபியும் சூளுரைத்துள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது.

தமிழ் சட்ட நிபுணர்கள் பலரும் அதே கருத்தையே வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஜேவிபியும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, கருத்து வெளியிடுகையில்,

”இந்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளை இல்லாமல் அகற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அனுமதிக்காது.

அரசதரப்பு உறுப்பினர்கள் பலரும், இந்தச் சட்டமூலத்தை விரும்பவில்லை. எனவே, அவர்களின் ஆதரவையும் பெற்று இந்தச் சட்டமூலத்தை தோற்கடிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜேவிபியும், இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கும், என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெற்றி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!