மீண்டும் அமெரிக்கா பறக்கிறார் கோத்தா – நீதிமன்றம் அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளார் என்று கூறப்படுகிறது.

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வரும் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக கூறியிருந்தார்.

எனினும், அவர் இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருக்கின்ற நிலையில், இம்மாத பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார்.

டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான நிதியில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச தற்போது, சிறப்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

நேற்றைய விசாரணைகளின் போது, வெளிநாடு செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று சிறப்பு மேல்நீதிமன்றில் கோரினார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 26ஆம் நாள் தொடக்கம், ஏப்ரல் 12ஆம் நாள் வரை, கோத்தாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவதற்கு உத்தரவிட்டனர்.

அத்துடன் அவரது கடவுச்சீட்டையும் தற்காலிகமாக விடுவிக்கவும் நீதிபதிகள் கட்டளையிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!