மதங்களைவிட உயிர் முக்கியம்- கணவன்மார்களை காப்பாற்ற கிட்னிகளை மாற்றி தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்து, முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவன்மார்களை காப்பாற்றுவதற்காக தங்கள் கிட்னிகளை மாற்றி தானம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் நதீம் (51). இவரது மனைவி நஸ்ரின் பட்டேல். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நதீம் கடந்த 4 ஆண்டாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது. இதற்காக அவர் மும்பையில் உள்ள சாய்பி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

இதே போல் அந்த ஆஸ்பத்திரியில் பீகாரைச் சேர்ந்த ராம்ஸ்வரத் யாதவ் என்பவரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை மனைவி சத்யதேவி கவனித்து வந்தார்.

நதீமுக்கும் அவரது மனைவி நஸ்ரீனும், ராம்ஸ்வரத்துக்கு அவரது மனைவி சத்யதேவியும் கிட்னி (சிறுநீரகம்) தானம் செய்ய முன் வந்தனர். ஆனால் அவர்களுக்குள் ரத்த பிரிவு ஒத்துப் போகவில்லை.

அப்போது நதீமுக்கு சத்யதேவியின் ரத்த பிரிவும், ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரின் ரத்தபிரிவும் ஒத்துப் போனது. இதனால் நதீமுக்கு சத்யதேவும், ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரினும் கிட்னி கொடுக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.

இதனை இரு குடும்பத்தினரும் ஏற்க சம்மதித்தனர். அதன்படி ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு கிட்னியை தானமாக கொடுத்தனர். இதையடுத்து ஆபரேசன் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இவ்வாறு இந்து, முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவன்மார்களை காப்பாற்றுவதற்காக கிட்னிகளை மாற்றி தானம் செய்திருப்பது மத ஒற்றுமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!