மோடி படம் அச்சிட்ட டிக்கெட்களை திரும்ப பெறுகிறது ஏர் இந்தியா!

பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரின் படங்களை அச்சிட்ட டிக்கெட்டுகளை திரும்பப் பெறுவதாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், டில்லி விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவன விமான டிக்கெட்டில், பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியதுடன், தேர்தல் கமிஷனிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது,

“குறித்த டிக்கெட்டுகள் ஜனவரி மாதம் அச்சிடப்பட்டவை. அதில் உள்ள மோடி மற்றும் விஜய் ரூபானியின் படங்கள், அப்போது குஜராத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டு விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது. மூன்றாம் நபர் அளித்த விளம்பரத்தின் அடிப்படையில் குறித்த படங்கள் அச்சிடப்பட்டன.

குறித்த டிக்கெட்டுகள் குஜராத் மட்டுமன்றி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விநியோகிக்கப்பட்டன. எனினும், இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் குறித்த டிக்கெட்டுகளை உடனடியாக திரும்பப் பெறுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!