வெற்றி வேட்பாளர் இன்னமும் கிடைக்கவில்லையாம் – மகிந்தவே கூறுகிறார்

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெற்றி பெறக்கூடிய வேட்பாளரைத் தாம் தேடிக் கொண்டிருப்பதாகவும், அவ்வாறான ஒருவரையே தான் ஆதரிப்பேன் என்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் என்று கோத்தாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச என பல பேரின் பெயர்கள் கூறப்படுகின்றன.

பசில் ராஜபக்ச தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இன்னமும் நாங்கள் போட்டியில் நிறுத்தவுள்ள வேட்பாளரைத் தீர்மானிக்கவில்லை.

சிறிலங்கா பொதுஜன முன்னணி பரிந்துரைக்கின்ற வேட்பாளரையே நான் ஆதரிப்பேன்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெறக் கூடிய வேட்பாளரை இன்னமும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அவ்வாறான ஒருவரைத் தான் போட்டியில் நிறுத்துவோம்.

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் வரை பொதுஜன முன்னணியின் வேட்பாளரை அறிவிக்கமாட்டோம்.

ஐதேக நிறுத்தப் போகும் வேட்பாளரைப் பொறுத்தேன சிறிலங்கா பொதுஜன முன்னணி யின் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அதற்கு முன்னர் களத்தில் நிறுத்தமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த ஒக்ரோபர் 26 ஆம் நாள், தாம் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டதால் மக்கள் மத்தியில் இருந்த தமது செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது உண்மையே என்றும் மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!