பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்ட தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள், பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கில் ரொக்கம் மற்றும் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லும் தங்கம் சிக்கி வருகிறது. இந்த நிலையில் பறக்கும் படை சோதனையில் பிடிப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க தேர்தல் அதிகாரி மற்றும் போலீசார் லஞ்சம் கேட்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஜெய்குகன். கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் சம்பந்தமாக ரூ. 50 ஆயிரம் பணத்துடன் காரில் அயனாவரம் நோக்கி சென்றார்.

அப்போது வில்லிவாக்கம் கல்லுக்கடை பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் ஜெய்குகனின் காரை நிறுத்தி சோதனை நடத்திய போது ரூ.50 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்தனர். பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெய்குகன் இதுபற்றி வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் இது தொடர்பாக தேர்தல் அதிகாரியான மத்திய வட்டார துணை ஆணையர் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் இதுபற்றி விசாரணை நடத்தினார். அப்போது சோதனையில் ஈடுபட்ட பறக்கும் கடை அதிகாரி பாபு, கோயம்பேடு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், போலீஸ்காரர்கள் காத்திகேயன், வீரமணி ஆகியோர் பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். பாபு, சென்னை மாநகராட்சி மண்டலம் 5-ல் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!