தென் கொரியாவுக்கு இணையாக தனது நேரத்தை மாற்றிக் கொண்ட வட கொரியா!

இரு கொரிய நாடுகளும் இணைந்த பிறகு தங்களது உறவை மேம்படுத்தும் வகையில் தென் கொரியாவுக்கு இணையாகத் தனது நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளது வட கொரியா. வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்ற பிறகு, மீண்டும் கொரியப் போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டது. ஏனெனில், வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனையால் உலக நாடுகள் மிரண்டன. இந்தச் சோதனை, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மிகவும் பாதித்தது. வடகொரியாவின் இந்தச் செயலுக்கு, ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துவந்தது.

மேலும், வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரிய அதிபர், இனி அணு ஆயுதச் சோதனை நடத்தப்போவதில்லை எனக் கூறினார். இந்த முடிவு, கொரிய நாடுகளின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு, அனைத்து நாட்டுத் தலைவர்களும் வரவேற்பளித்திருந்தனர்.

இதை அடுத்து இரு கொரிய நாடுகளின் உறவை மேம்படுத்தும் வகையில் 65 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 27-ம் தேதியன்று வடகொரிய எல்லையில் தென் கொரிய அதிபரும், தென் கொரிய எல்லையில் வடகொரிய அதிபரும் கால் பதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தை நிகழ்த்தினர். பின் நடந்த உச்சி மாநாடு இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது, வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே இருக்கும் நேரக்கணக்கீடு பிரச்னையை தீர்க்கும் வகையில், வட கொரியா தங்களது நேரத்தை அரை மணி நேரம் முன்நோக்கி நகர்த்தி, இரு நாடுகளுக்கு இடையே இருந்த உறவை மிகவும் வலுப்படுத்தியுள்ளது. முன்னதாக தென் கொரியாவை விட வடகொரியா அரைமணி நேரம் தாமதமாக செயல்பட்டு வந்தது. இரவு 11:30 மணியில் இருந்த வடகொரியா அரை மணிநேரம் முன்நோக்கி சென்று தங்களது நேரத்தை 12:00 மணியாக மாற்றியமைத்தது. இதனால் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் அடுத்த தேதி பிறந்தது. வட கொரியாவின் இந்தச் செயல் உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!