கோத்தாவே சரியான போட்டியாளர்! – மனோ கணேசன்

எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றால் கோத்தாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கோத்தாபய ராஜபக்ஷ குறித்து இன்று அதிகமாக பேசப்படுகின்றது. அவர் ஒரு அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட நபர். இரண்டு நாடுகளின் பிரஜாவுரிமை கொண்ட நபர் ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு வந்தால் இங்கு போட்டியிட முடியும். ஆனால் அமெரிக்க குடியுரிமையை பெற்றுக்கொள்வது சாதாரண விடயம் அல்ல. அதேபோல் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவதும் கடினமான விடயமாகும்.

அதேபோல் 19 ஆம் திருத்தம் வந்துவிட்டது. இப்போது இரட்டை பிரஜாவுரிமை நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமை உள்ளது. கோத்தாபய ராஜ்பக்ஷ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோத்தாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும். எமக்கும் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அந்த வெற்றியில் தான் ஒரு பெறுமதி இருக்கும்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் எமது வேட்பாளரை நாம் தெரிவுசெய்து விட்டோம். ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் அனைவரும் இந்த வேட்பாளருக்கு ஆதரவையும் தெரிவித்துவிட்டோம். ஐக்கிய தேசிய கட்சியின் பலமான ஒருவரே அவர். அவர் பொது அணியின் சார்பில் களமிறங்கவுள்ளார். நிச்சயமாக வெற்றிபெறும் தூய்மையான வேட்பாளரே அவர். வெகு விரைவில் அவரை அறியப்படுத்துவோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!