வாக்களித்தவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கும் தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள்

மக்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு கை விரலில் உள்ள மையைக் காண்பித்தால் ஹோட்டல்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 18ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவு 100 சதவீதம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல்ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேர்தல் நாளன்று வாக்களித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் ஹோட்டலுக்கு உணவுஉட்கொள்ள வருபவர்கள் கை விரலில் உள்ள மையை காண்பித்தால் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில தலைவர் வெங்கட சுப்பு தெரிவிக்கையில், “தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் வாக்குப்பதிவு நாளன்று வாக்களித்ததற்கு சாட்சியாக கை விரலில் மையை காண்பித்தால் மாலை 6 மணிக்கு மேல் தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டலில் உணவு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மக்கள் மத்தியில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்கான முயற்சியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்” என்றார்.

குறித்த சங்கத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன் தெரிவிக்கையில், “மக்கள் மத்தியில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஹோட்டல் துண்டில் வாக்களிப்பது தொடர்பான வாசகங்களை அச்சடித்து விநியோகிக்கும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கேட்டு கொண்டனர்.

நாங்கள் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு எடுத்தோம். இதன் அடிப்படையில், அன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு வரை பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து ஹோட்டல்களிலும் தள்ளுபடி வழங்கப்படும்.

எங்களுடைய தேச கடமையாக இதை எடுத்துச்செய்து வருகிறோம். எங்களுடைய சங்கத்தை தவிர்த்து ஒரு இலட்சம் ஹோட்டல்கள் உள்ளன. அவர்களும் தள்ளுபடி வழங்குவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

சென்னை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் எம். ரவி தெரிவிக்கையில், “சென்னைமுழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. இவற்றில், 2,500 ஹோட்டல்கள் எங்களுடைய சங்கத்தில் உள்ளன. எங்களுடைய சங்கத்தில் இல்லாத ஹோட்டல்களிலும் 10% தள்ளுபடி வழங்குவோம் என்று உறுதியளித்துள்ளனர்.

10% தள்ளுபடி வழங்குவது குறித்துசமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகிறோம். இதுதொடர்பாக இம்மாதம் 17ஆம் திகதி ஹோட்டல்கள் முன்பு அறிவிப்புபலகையும் வைக்க உள்ளோம்.

மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!