20 ஆவது அரசமைப்புத் திருத்தமும் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பும்!!

அர­ச­மைப்­பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்­கும் 20 ஆவது திருத்­தத்தை பௌத்த பிக்­கு­மார் சங்­கம் கடு­மை­யாக எதிர்த்­துள்­ளது. இந்­தத் திருத்­தம் நாடு பிள­வு­ப­டு­வ­தற்கு வழி வகுத்து விடு­மெ­னக் கூறியே இவ்­வாறு எதிர்ப்­புத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரச தலை­வ­ரின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களில் பலவற்றை இல்­லா­தொ­ழிக்­கும் வகை­யி­லேயே அர­ச­மைப்­புக்­கான 20 ஆவது திருத்­தத்தை மேற்­கொள்­வ­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு மகிந்த தரப்­பி­ன­ரும் பிக்­கு­மார்­க­ளும் கடு­மை­யான எதிர்ப்­பைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

நிறை­வேற்று அதி­கார
நடை­மு­றை­யால் நாட்டு
மக்­க­ளுக்கு பாதிப்பே அதி­கம்

அரச தலை­வ­ருக்கு அர­ச­மைப்­பின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்­கள் நாட்­டின் ஜன­நா­யக உரி­மை­களை முற்­றா­கவே ஒழிக்க வல்­லவை. அரச தலை­வர் ஒரு சர்­வா­தி­கா­ரி­யைப் போன்று செயற்­ப­டுவ­தற்கு இது வழி வகுக்­கின்­றது. அரச தலை­வரை நீதி மன்­றங்­க­ளி­னால்­கூ­டக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அவ­ருக்கு எதி­ரா­கக் கேள்வி எழுப்­பு­வ­தற்­கும் எவ­ருக்­கும் உரிமை கிடை­யாது.

நாடா­ளு­மன்­றச் செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கும், குறித்த காலத்­தின் பின்­னர் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து விடு­வ­தற்­கும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தின் கீழ் வகை செய்­யப்­பட்­டுள்­ளன. மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால், தாம் மீண்­டும் வெலிக்­க­டைச் சிறைக்­குச் செல்ல நேரிடுமென சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளமை கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது.

நிறை­வேற்று அதி­கா­ரங்­க­ளைக் கொண்­டி­ருந்த மகிந்த ராஜ­பக்­ச­வி­னால் சரத் பொன்­சேகா எதிர்­கொண்ட இன்­னல்­கள் ஏரா­ளம். தம்மை எதிர்த்­துத் தேர்­த­லில் போட்­டி­யிட்ட ஒரே கார­ணத்­துக்­கா­கத், தமது நிறை­வேற்று அதி­கா­ரங்­க­ளைப் பயன்படுத்தி மகிந்த, சரத்­பொன்­சே­கா­வுக்கு எத்­த­னையோ இன்­னல்­களை விளை­வித்­தார்; அவரைக் கடு­மை­யா­கப் பழி வாங்­கி­னார். விசா­ர­ணை­க­ளின்றி அவ­ரைச் சிறை­யில் அடைத்­தார். அவ­ரது பதவி, பட்­டங்­கள், பதக்­கங்­கள் யாவும் பறித்­தெ­டுக்­கப்­பட்­டன. அவ­ருக்கு வழங்­கப்­பட்ட ஓய்­வூ­தி­ய­மும் நிறுத்­தப்­பட்­டது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­விக்கு வந்­த­தன் பின்­னர் இவை­யா­வும் பொன்­சே­கா­வுக்­குத் திரும்­ப­வும் வழங்­கப்­பட்­டன. சிறை­வா­சத்­தி­லி­ருந்­தும் அவர் விடு­விக்­கப்­பட்­டார். பீல்ட் மார்­ஷல் என்ற உயர்ந்த அந்­தஸ்­தும் அவ­ருக்­கும் வழங்­கப்­பட்­டது. தற்­போது அமைச்­ச­ரா­க­வும் அவர் உள்­ளார். ஆனால் மகிந்­தவோ அல்­லது அவ­ரது தரப்­பைச் சேர்ந்த ஒரு­வரோ, அரச தல­வை­ராக வந்­து­விட்­டால், பொன்­சே­கா­வின் நிலை பழைய மாதிரி ஆகி­வி­டு­மென்­ப­தில் ஐய­மில்லை. இத­னால் தான் பொன்­சேகா மகிந்த குறித்து கடு­மை­யாக அச்­சப்­ப­டு­கின்­றார்.

அர­ச­மைப்­புக்­கான 20ஆவது
திருத்­தம் குறித்து இன­வா­தி­கள்
சிங்­கள மக்­க­ளைப் பய­மு­றுத்­து­கின்றனர்

இதே­வேளை அர­ச­மைப்­பில் 20 ஆவது திருத்­தத்தை மேற்­கொள்­வ­தன் ஊடாக, தனி­நாடு உரு­வா­கி­வி­ட­மென பிக்­கு­மார் சங்­கம் கூறி­யுள்­ளமை வேடிக்­கை­யா­னது. அது­மட்­டு­மல்­லாது, அது இன­வா­தத்­தை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது. அர­ச­மைப்­பின் 13 ஆவது திருத்­தம் நடை­மு­றை­யில் உள்ள நிலை­யில், 20 ஆவது திருத்­த­மும் நடை­மு­றைக்கு வந்­தால் தமி­ழர்­கள் தனி­நாட்­டைப் பெற்று விடு­வார்­க­ளென அவர்­கள் கூறு­கின்­ற­னர். இது பெரும் பான்­மை­யின மக்­க­ளைக் குழப்பி விடு­கின்­ற­தொரு செய­லா­கும்.

நிறை­வேற்று அதி­கா­ரம் தமி­ழர்­க­ளை­யும் பாதித்­துள்­ளது. ஆனால் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு மத்­தி­யில் அவர்­க­ளது வாழ்க்கை செல்­வ­தால் இதை­யொரு பொருட்­டாக அவர்­கள் கரு­து­வ­தில்லை. தற்­போ­தைய அரச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன தமது நிறை­வேற்று அதி­கா­ரங்­களை உரிய முறை­யில் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தால், முன்­னைய ஆட்­சிக் காலத்­தில் ஊழல், மோச­டி­கள், குற்­றச் செயல்­கள் ஆகி­ய­வற்­றில் ஈடு­பட்­ட­வர்­களை உரிய வகை­யில் தண்­டித்திருக்­க­லா­ மெ­னக் கூறு­வோ­ரும் உண்டு. ஆனால் அவர் அவற்­றைச் செய­ல­ள­வில் பயன்­ப­டுத்த முன்­வ­ரு­வ­தில்லை.

பிர­பா­க­ர­னுக்­குப் பின்­னர் தமிழ்த் தலை­வர்­கள் எவ­ருமே தனி­நாடு தொடர்­பா­கப் பேசு­வ­தில்லை. ஒரே நாட்­டுக்­குள் தமி­ழர்­க­ளுக்கு கூட்­டாட்சி முறை­யி­லான அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்றே அவர்­கள் கேட்டு வரு­கின்­ற­னர். ஆனால் இதைப் பொறு­மை­யாக ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு இன­வா­தி­க­ளுக்­கும், பெளத்­த­ம­தத் தலை­வர்­க­ளுக்­கும் நேரம் கிடைப்­ப­தில்­லை­யென்றே எண்­ணத் தோன்­று­கின்­றது.

அர­ச­மைப்­புக்கு அடிக்­கடி
திருத்­தம் மேற்­கொள்­வது
உகந்த செயலல்ல

இதே­வேளை அர­ச­மைப்­பில் அர­சி­யல்­வா­தி­க­ளின் எண்­ணத்­துக்கு ஏற்­ற­வாறு காலத்­தக்­குக் காலம் திருத்­தங்­களை மேற்­கொள்­வது சரி­யா­ன­தொரு நட­வ­டிக்­கை­யா­கத் தெரி­ய­வில்லை. இதற்­குப் பதி­லாக மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­கள் தொடர்­பாக ஆராய்ந்து பார்த்­து­விட்டு, கட்­சித் தலை­வர்­க­ளின் ஒப்­பு­த­லு­டன் ஒரே தட­வை­யில் சகல சீர்­தி­ருத்­தங்­க­ளை­யும் மேற்­கொள்­ள­லாம் அல்­லது புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பா­கக் கவ­னம் செலத்­து­தலாம். சிறு­பான்­மை­யின மக்­க­ளின் விருப்­ப­மும் அது­தான்.

ஆனால் தெற்­கி­லுள்ள அர­சி­யல்­வா­தி­கள் சிறு­பான்மை மக்­க­ளின் விருப்­பங்­களை ஒரு பொருட்­டாக மதிப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. தாம் எதைச் செய்­தா­லும், நாட்டு மக்­கள் அவற்றை ஏற்­றுக்­கொள்ள வேண்­டு­மென அவர்கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். இனப்­பி­ரச்­சினை தீர்வு காணப்படாமல் இழு­ப­டு­வ­தற்கு இந்த மன­நி­லையே பிர­தா­ன­மான கார­ண­மா­கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!