வெளிநாட்டு புலனாய்வு எச்சரிக்கை – தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் ரத்து

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தேவாலயங்களில் நாளை மீண்டும் ஆரம்பமாகவிருந்த, ஞாயிறு திருப்பலி ஆராதனைகளை கத்தோலிக்கத் திருச்சபை ரத்துச் செய்துள்ளது.

புதிதாக விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கைகளை அடுத்தே கத்தோலிக்க திருச்சபையின் சிறிலங்கா பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

குறைந்தது இரண்டு வழிபாட்டு இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல் ஒன்றை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் நாள் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, மே 05ஆம் நாள் தொடக்கம் மீண்டும் தேவாலயங்களில் ஞாயிறு திருப்பலி ஆராதனைகள் நடைபெறும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும், புதிதாக கிடைத்த தகவலை அடுத்து அவர் ஞாயிறு ஆராதனைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தேவாலயம் ஒன்றும், கத்தோலிக்க நிறுவனம் ஒன்றும் இந்தவாரம் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்று வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு தமக்கு தகவல் வழங்கியுள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் என ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவாலய அதிகாரிகளுக்கு அவர் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த தகவலை கூறியுள்ளார்.

மறு அறிவித்தல் வரை கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நிறுத்துமாறும், கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டாம் என்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இந்தக் கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்திய கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் வண. எட்மன்ட் திலகரத்ன, மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

அத்துடன் எச்சரிக்கை விடுத்த வெளிநாட்டு புலனாய்வு வட்டாரங்கள் குறித்தும் அவர் தகவல் வெளியிட மறுத்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!