அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி!

திருவண்ணாமலை அரசு மருத்துவ மனையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், நோயாளிகள் மற்றும் அவருடன் தங்கி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் கலெக்டருக்கு புகார் வந்தன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் பணி புரியும் காவலாளி ஒருவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ பதிவும் சமூக வலை தளங்களில் பரவியது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அறிந்த கலெக்டர் கந்தசாமி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் 3 பெரிய கிணறுகள் உள்ளன. அந்த கிணறுகளில் தண்ணீர் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அவர் பார்வையிட்டார். பின்னர் ஒவ்வொரு வார்டுகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இங்கு தண்ணீர் பிரச்சினை உள்ளதாகவும், காவலாளி ஒருவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றியதாகவும் சமூக வலை தளங்களில் புகார்கள் பரவி வருகிறது. இது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மருத்துவமனைக்கு தேவைப்படும் தண்ணீர் போதிய அளவுக்கு உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணறுகள் மூலமாகவும், டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் வாங்கப்படுகிறது. மேலும் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்தும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இங்கு ஒரு நாளைக்கு சுமார் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் குறைந்த அளவிலேயே உள்ளது. கிணற்றை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி ரமேஷ் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் மருத்துவமில்லா பணியாளர்கள் யாரும் மருத்துவம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!