நீரில் மூழ்கியது குடியேற்றவாசிகளின் மற்றுமொரு படகு – 70 பேர் பலி

துனிசியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 70ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

குடியேற்றவாசிகள் பலியான சம்பவத்தை உறுதி செய்துள்ள யுஎன்எச்சீர்ஆர் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

உயிர்தப்பியவர்களை துனிசிய கடற்படையினர் கரைக்கு கொண்டுவந்துள்ளனர் எனவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் யுஎன்எச்சீர்ஆர் தெரிவித்துள்ளது.

படகு கவிழ்ந்த சம்பவத்தை அறிந்ததும் கடற்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்தனர் அவ்வேளை மீன்பிடிப்படகொன்று உயிர்பிழைத்தவர்களை காப்பாற்றிக்கொண்டிருந்தது என துனிசிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

லிபியாவிலிருந்து புறப்பட்ட படகு இயந்திரக்கோளாறு காரணமாக நீரில் மூழ்கியது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்தியதரைக்கடலை கடக்க முயலுபவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்தை இந்த துன்பகரமான சம்பவம் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது என யுஎன்எச்சீர்ஆர் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான அகதிகளும் குடியேற்றவாசிகளும் லிபியாவை தளமாக பயன்படுத்தி மத்தியதரைகடலை கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைவதற்காக வருடம்தோறும் முயற்சிகளை மேற்கொள்வதும் அதன் போது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறப்பதும் வழமையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழுதடைந்த அல்லது சரியாக பராமரிக்கப்படாத சிறிய கப்பல்கள் மற்றும் படகுகளில் பெருமளவானவர்கள் மத்தியதரைகடலை கடக்க முயல்வதன் காரணமாக இந்த விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

2019 இன் முதல் நான்கு மாதங்களில் 164 பேர் மத்தியதரை கடலை படகுகள் மூலம் கடக்கும் முயற்சிகளின் போது மரணித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!