சட்டம் ஒழுங்கு அமைச்சினை தவிர பிறிதொரு அமைச்சை பொறுப்பேற்க முடியாது – சரத்பொன்சேகா

சட்டம் , ஒழுங்கு அமைச்சு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பிறிதொரு அமைச்சு பதவியை வழங்கி தேசிய பாதுகாப்பு சபையின் ஆலோசகராக்கும் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. எனது நிலைப்பாட்டில் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது. எவ்வித அமைச்சு பொறுப்புக்களையும் பொறுப்பேற்கவும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தீவிரவாத தாக்குதலை அரசாங்கம் குறிப்பிடுவது போன்று குறுகிய காலத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. பாதுகாப்பு துறை சார் விடயங்கள் அரசியல்வாதிகளுக்கு தெரியாது. சிலர் பேச்சளவில் மாத்திரமே கருத்துரைக்கின்றார்கள். தேசிய பாதுகாப்பு தொடர்பில் புரிந்துக் கொள்வதற்கும், செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் முறையான பின்புலம் அவசியம்.

பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது இன்று பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பை முறையாக பலப்படுத்தியதுடன், கற்றல் செயற்பாடுகள் இடம் பெறுவதும் அவசியம், யுத்தக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது காணப்படுவது கிடையாது. பல விடயங்களில் தாமத நிலை காணப்படுகின்றது. இதற்கு பல்வேறு அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்து கின்றன.

சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தனக்கு கிடைக்குமா என்று உறுதியாக குறிப்பிட முடியாது. திறமைக்கு பொருந்தும் அமைச்சுக்களை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு பிறிதொரு அமைச்சு பதவியை வழங்கி தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. எனது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளேன். எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கு அமைச்சினை தவிர்த்து பிறிதொரு அமைச்சினை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!