இரவு நேர ரெயிலில் படுக்கை வசதி வாங்கி தருவதாக கூறி பயணிகளிடம் நூதன முறையில் கொள்ளை!

மும்பையில் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பீகார் நோக்கி செல்லும் இரவு நேர ரெயில்களில் தொடர்ந்து பயணிகளிடம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி பல புகார்கள் கல்யாண் ரெயில் நிலைய போலீசாரிடம் வந்துள்ளன. இதனை தொடர்ந்து சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்ததில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முகமது சந்த் லல்லே கான் (வயது 23), அப்சல் காசிம் கான் (22), தின் முகமது ஆயுப் கான் (வயது 35) மற்றும் பர்மன் ரஜாப் கான் (வயது 24) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் மகாராஷ்டிராவின் மும்பை நகரில் நாகபாதா பகுதியில் வசித்து வருகின்றனர்.

போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில், மும்பை அருகே லோக்மான்ய திலகர் முனைய பகுதியில் இருந்து புறப்படும் இரவு நேர ரெயில்களை இலக்காக கொண்டு இவர்கள் செயல்பட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இங்கு வரும் பயணிகளிடம் உங்களுக்கு படுக்கை வசதி கொண்ட இருக்கை வாங்கி தருகிறோம் என கூறுகின்றனர். பின்பு ரெயில் நிலையத்தில் இருட்டான பகுதி வழியே அழைத்து சென்று கத்தி முனையில் மிரட்ட தொடங்குவர்.

அவர்களிடம் இருந்து பணம், மொபைல் போன்கள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விடுவார்கள். அவர்கள் பல பயணிகளிடம் இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த வருடமும் இதேபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். திருடப்பட்ட பொருட்கள் அவர்களிடம் இருந்து இன்னும் மீட்கப்படவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!