குழந்தைக்குப் பெயர் வைக்கச் சண்டை -இறுதியில் நீதிபதி பெயர் சூட்டினார்!!

குழந்தைக்குப் பெயர் வைப்பது குறித்து கணவன் மனைவி இடையே பிரச்சினை உருவான நிலையில், நீதிபதியே ஒரு நல்ல பெயரை வைத்து வழக்கை முடித்து வைத்தார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்து ஆண் மற்றும் கிறித்தவ பெண்ணுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2013ஆம் ஆண்டு பிறந்த இவர்களது இரண்டாவது ஆண் குழந்தைக்கு இந்து முறைப்படி அபினவ் சச்சின் என்று தந்தையும், கிறித்தவ முறைப்படி ஜோகன் மணி சச்சின் என்று தாயும் முடிவு செய்தனர். இதனால், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ஒருவருடமாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பான வழக்கும் கேரள உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

அதில், வரும் கல்வியாண்டில் குழந்தை பள்ளியில் சேர்க்கவேண்டிய அவசர சூழல் என்பதால், வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இரண்டு மத நம்பிக்கைக்கும் பிரச்சினை ஏற்படாத வண்ணம், ஜோகன் சச்சின் என்ற பெயரை வைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

மேலும், குழந்தைக்கு கூடிய விரைவில் பிறப்புச் சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!