முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடங்கள் நிரப்புவதில்லை – ரணில் முடிவு

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடைங்களை நிரப்புவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், றிசாத் பதியுதீன், அப்துல் ஹலீம் ஆகிய அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களான முகமட் பைசல், மொகமட் ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, அமீர் அலி ஆகியோரும், சிங்கள, பௌத்த பேரினவாதிகளின் அழுத்தங்களை அடுத்து, நேற்று முன்தினம் பதவிகளை விட்டு விலகினர்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் முடிவு செய்துள்ளார்.

முஸ்லிகள் இல்லாத முதல் அமைச்சரவை

கொழும்பில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சிறிலங்காவில் 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர், முஸ்லிம்கள் அங்கம் வகிக்காத முதல் அமைச்சரவை தற்போது பதவியில் இருப்பதாக கவலை வெளியிட்டிருந்தார்.

முஸ்லிம் அமைச்சர்கள் வகித்த அமைச்சுக்களை செயலர்களின் மூலம் நிர்வகிக்கவும், பிரதமர் செயலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் அவற்றை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதவி விலகல் குறித்து அறிவிக்கப்படவில்லை

பதவி விலகிய அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று புதிய ஆசனங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த, அவைக்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் இன்னமும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!