போட்டியில் இருந்து விலகுகிறார் மைத்திரி – ஐதேக பக்கம் சாய்கிறார்

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், ஐதேக அமைச்சர்களுடன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து சிறிலங்கா அதிபர் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்புக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என்றும் அவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவதற்குச் சாதகமான சமிக்ஞைகளையும் சிறிலங்கா அதிபர் வெளிப்படுத்தியுள்ளார்.

வரும் அதிபர் தேர்தலில் புதுமுகம் ஒருவரை நிறுத்தினால், அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் சிறிலங்கா அதிபர் கருத்து வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

“நாங்கள் ஒரு புது முகத்தை அதிபர் தேர்தலில் நிறுத்தி, எமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டால், அது திருப்தியளித்தால், எம்மை ஆதரிக்கத் தயார் என்றும், இல்லையெனில், நடுநிலை வகிப்பேன், மகிந்த குழுவுக்கு ஆதரவளிக்க மாட்டேன் என்றும் சிறிலங்கா அதிபர் எம்மிடம் கூறினார்.” என, அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, கடந்தவாரம் புதுடெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!