மாயமான விமானத்தை தேடும் பணிகளை துரிதப்படுத்துங்கள்: விமானத்தில் இருந்த அதிகாரிகளின் உறவினர்கள் வேண்டுகோள்!

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 13 பேருடன் சென்ற இந்த விமானம் சுமார் ½ மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. அருணாசல பிரதேசத்தின் சீன எல்லையோர பகுதியில் மாயமானதாக கருதப்படும் இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. விமானப்படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடற்படை ரேடார்கள், ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இரவு-பகலாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பணிகள் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தன. அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு விமானப்படை விமானங்களும், பாதுகாப்பு படையினரும் சல்லடை போட்டு தேடினர். எனினும் மாயமான விமானத்தை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அதிகாரிகளுக்கு உத்தரவு
மாயமான விமானத்தை தேடும் பணிகளில் பாதுகாப்பு படையினருக்கு உதவுமாறு சீன எல்லையோரத்தில் வசிக்கும் மக்களை அருணாசல பிரதேச முதல்-மந்திரி பிமா காண்டு கேட்டுக்கொண்டு உள்ளார். விமானத்தின் பாகங்கள் எதுவும் தென்பட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதைப்போல தேடுதல் பணிகளை தீவிரப்படுத்துமாறு சியாங் மற்றும் அதன் அருகில் உள்ள மேற்கு சியாங், கீழ் சியாங், சியோமி ஆகிய மாவட்ட அதிகாரிகளுக்கும் முதல்-மந்திரி உத்தரவிட்டு உள்ளார். விமானப்படை அதிகாரிகளுடன் இணைந்து இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு துணை கமிஷனர்களை அவர் அறிவுறுத்தினார்.

கரும்புகை எழுந்ததாக தகவல்
விமானம் மாயமானதாக கூறப்படும் நேரத்தில் சியாங் மாவட்டத்தின் மலைப்பகுதி ஒன்றில் இருந்து அடர்ந்த கரும்புகை மேலெழுந்ததை பார்த்ததாக தும்பின் கிராமத்தை சேர்ந்த 3 விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இதை கருத்தில் கொண்டுள்ள பாதுகாப்பு படையினர், அந்த பகுதியில் தேடும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். விமானத்தை தேடும் பணி நடைபெறும் பகுதிகளில் அடிக்கடி நிலவும் மோசமான வானிலையால் தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நேற்று காலையிலும் அந்த பகுதியில் கடும் மழை பெய்து பணிகளை முடக்கியது. எனினும் சிறிது நேரத்துக்குப்பின் அங்கு வானிலை சீரடைந்து பணிகள் மீண்டும் தொடங்கின.

உருக்கமான வேண்டுகோள்
விமானம் மாயமாகி 4 நாட்கள் கடந்த பின்னரும் அது குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அதில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விமானத்தையும், அதில் இருந்த தங்கள் சொந்தங்களையும் தேடும் பணிகளை துரிதப்படுத்துமாறு மத்திய அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளனர். விமானம் மாயமானபோது அதன் விமானியாக இருந்தவர், அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் தன்வார் (வயது 29) ஆவார். அவரது மனைவி சந்தியாவும் ஜோர்காட் விமானப்படை தளத்திலேயே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

விமானம் மாயமானதை முதலில் அறிந்தார்
கடந்த 3-ந்தேதி பணியில் இருந்த சந்தியா, தனது கணவர் ஓட்டிச்சென்ற விமானம் கிளம்புவதையும், அதன் இயக்கத்தையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததை முதலில் கண்டுபிடித்தவர்களில் சந்தியாவும் ஒருவர் என்பதுதான் மிகுந்த சோகமாகும். இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடந்தது.

ஆஷிஷ் தன்வார் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால் அவரது சொந்த ஊர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரையும், சக அதிகாரிகளையும் கண்டுபிடிக்க அனைத்து நவீன வசதிகளையும் பயன்படுத்துமாறு ஆஷிஷ் தன்வாரின் தாய் சரோஜ், பிரதமர் மோடிக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைப்போல மாயமான விமானத்தில் இருந்த மற்றொரு அதிகாரியான மொகித் கார்க் (27) என்பவரின் குடும்பத்தினரும், விமானத்தை தேடும் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!