”தெரிவுக்குழு விசாரணையை நிறுத்தாவிடின் …. ” – அச்சுறுத்திய சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

நேற்றிரவு 7.30 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அவசரமாக கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் கோபத்துடன் காணப்பட்டார் என்றும், அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ள எம்.ஏ.சுமந்திரன், ஜயம்பதி விக்ரமரத்ன, சரத் பொன்சேகா, ஆஷூ மாரசிங்க ஆகிய உறுப்பினர்கள், தனது பெயரைக் கெடுக்கும் வகையில், அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றனர் என்றும், சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.

தெரிவுக்குழுவின் விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமைச்சரவையிடம் கோரிய, சிறிலங்கா அதிபர், அவ்வாறு தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்படாவிட்டால், அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட எல்லா அரசாங்க செயற்பாடுகளிலும் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்வேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் குறித்து விசாரிக்க ஏற்கனவே அதிபர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு அவசியமில்லை எனவும், அவர் கூறியுள்ளார்.

எனினும், சிறிலங்கா அதிபரின் கோரிக்கைளை அமைச்சர்கள் நிராகரித்துள்ளனர்.

தெரிவுக்குழுவின் விசாரணைகளைத் தொடர்வதா- நிறுத்தவதா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும், அமைச்சரவைக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், “விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் சிறிலங்கா அதிபர் விடாப்பிடியான நிலைப்பாட்டில் இருந்தார். புலனாய்வு அதிகாரிகள் ஊடகங்களின் முன்பாக சாட்சியமளிக்க அழைக்கப்பட வேண்டியது அவசியமில்லை” என்று அவர் வலியுறுத்தினார் என, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

கேள்விகளுக்குத் தான் பதிலளிக்கத் தயார் என்றும், ஆனால் தெரிவுக்குழு முன்பாக அன்றி, எல்லா 225 நாடாளுமன்ற உறுளுப்பினர்களின் முன்பாகவே அதனைச் செய்வேன் எனவும், ஊடகங்கள் அனுமதிக்க முடியாது என்றும் சிறிலங்கா அதிபர் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் காவல்துறை மா அதிபர், மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோர் தெரிவுக்குழுவில் பரபரப்பு சாட்சியங்களை அளித்ததை தொடர்ந்து, நேற்று இரவு இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!