மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார்

சிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாத இறுதியில் மருத்துவ சோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

அறுவைச் சிகிச்சை

சிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச, அவசர சிகிச்சைப் பிரிவின் அனுமதிக்கப்பட்டு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நான்கு வார ஓய்வு

இதையடுத்து, அவரது உடல் நிலை சீரடைந்து, தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறி, சிங்கப்பூரில் உள்ள தங்குமிடம் ஒன்றில் கோத்தாபய ராஜபக்ச ஓய்வெடுத்து வருகிறார்.

நான்கு வாரங்கள் அவர் படுக்கையில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மீண்டும் உயிர்த்த முகநூல்

கோத்தாபய ராஜபக்சவின் முகநூலில், நேற்று இடுகை செய்யப்பட்டுள்ள பதிவு ஒன்றில், “தொழில்வல்லுனர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கருத்துக்களை நிராகரிக்கும் நேரம் இது. மாறாக, தேசத்தை கட்டி எழுப்புவதில் அவர்களின் நிபுணத்துவத்தை பெறுவது அவசியம்.” என குறிப்பிட்டுள்ளார்.

பசிலும் பச்சைக்கொடி

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடந்த கட்சிகளின் செயலாளர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர், கருத்து வெளியிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனரான பசில் ராஜபக்ச, தமது கட்சியின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் அவரை விரும்புகின்றனர், மக்களின் விருப்பத்தை பொதுஜன பெரமுன கருத்தில் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கை கோர்க்கத் தயாராகும் ஹக்கீம்

கோத்தாபய ராஜபக்ச அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவில்லை என, அண்மையில் பதவி விலகிய அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

“ஒரு சிறந்த, பலமான தலைவரையே முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த பலம் கோத்தாபய ராஜபக்சவிடம் இருக்கிறது.

ஆனால், முஸ்லிம் மக்களிடத்தில் அவர் குறித்து விமர்சனங்கள் இருக்கிறது. அந்த விமர்சனங்களை இல்லாமல் செய்வது அவரது பொறுப்பாகும். அந்த விமர்சனம் தொடர்ந்தும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கும் என கருத முடியாது.

எதிர்காலத்தில் நாம் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுட வேண்டிய நிலை ஏற்பட்டால் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. ” என்றும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!