படையினரைக் கொன்றதாக குற்றச்சாட்டு – முன்னாள் புலிகளுக்கு எதிராக வழக்கு

போர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இந்த மாதம் 24 ஆம் நாள் தொடக்கம் விசாரிக்கப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள், 18 கடற்படை அதிகாரிகள், 08 இராணுவத்தினர் என, விடுதலைப் புலிகளின் தடுப்பில் இருந்த 26 சிறிலங்கா படையினர் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். அவர்களின் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த புலிகளின் புலனாய்வு முகாமை கைவிடும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த போர்க்கைதிகள் கொலை தொடர்பான விசாரணைகளை, 2010ஆம் ஆண்டு தீவிரவாத விசாரணைப் பிரிவு ஆரம்பித்திருந்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்தக் கைதிகள் சுடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு எதிரான வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள், எதிர்வரும் 24ஆம் நாள் தொடக்கம் ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!