பாதுகாப்பு அதிகாரிகளின் சாட்சியங்கள் – இரகசியமாக பதிவு செய்ய தெரிவுக்குழு முடிவு

சேவையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து சாட்சியம் அளிக்கும் போது, ஊடகங்களை அனுமதிப்பதில்லை என்று, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.

தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று நடத்திய கூட்டத்தின் போது, கடந்தகால அமர்வுகள் தொடர்பாக மீளாய்வு செய்த பின்னர், இந்த முடிவை எடுத்திருப்பதாக, அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

”சேவையில் உள்ள சில அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பதவி நிலைகளையோ அவர்களின் சாட்சியங்களையோ, தெரிவுக்குழு பகிரங்கப்படுத்தாது.

அவ்வாறான அமர்வுகள் காணொளிப் பதிவு செய்யப்படும். ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது”. என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதில், தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த அப்துல் ராசிக் உள்ளிட்ட நால்வர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!