சிறிலங்கா நாடாளுமன்ற பாதுகாப்புக்கு கருவிகளை வழங்கியது சீனா

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு 33 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்புக் கருவிகளை சீன அரசாங்கம் கொடையாக வழங்கியுள்ளது.

மூன்று நடமாடும் எக்ரே இயந்திரங்கள், மற்றும் உலோகப் பொருட்களைக் கண்டறியும் ஐந்து கருவிகள், அடங்கிய இந்த பாதுகாப்புக் கருவிகளை சீன தூதுவர் செங் ஷியுவான், நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்தப் பாதுகாப்புக் கருவிகளை, சீனா அவசர அடிப்படையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ளதாக, சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் சிறிலங்காவுக்கு, அவசர நிதியுதவியாக 2.6 பில்லியன் ரூபாவை வழங்கியிருந்ததுடன், சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, தொழில்நுட்ப பயிற்சிகள், பாதுகாப்புக் கருவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இதன் அடிப்படையில், சிறிலங்காவின் முப்படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த, 20 மூத்த அதிகாரிகள், சீனாவில் இரண்டு வார கால பயிற்சிகளை முடித்துக் கொண்டு, ஜூன் 17ஆம் நாள், நாடு திரும்பியுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறைக்கு,சீனா 10 ஜீப் வண்டிகளை வழங்கியிருப்பதுடன், மேலும் 100 ஜீப் வண்டிகளை வழங்கவும் இணங்கியுள்ளது.

தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில், அவ்வப்போது, ஆராய்ந்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனா எப்போதுமே சிறிலங்காவை, நல்ல அயலவராக, நல்ல நட்பு பங்காளராக, நல்ல நண்பனாக, நல்ல சகோதரரராகவே கருதுகிறது.

சீனாவினால் சிறிலங்காவுக்கு அளிக்கப்படும், அனைத்து உதவிகளும் எந்த கோர்வைகளாலும் இணைக்கப்படவில்லை. இது சீன மக்களின் நலலெண்ணத்தையே பிரதிபலிக்கிறது” என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!