பொய்யான செய்திகளை பரப்பினால் 5 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்!

நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இடையூறை ஏற்படுத்தக் கூடிய பொய்யான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி இத்தகைய குற்றச்செயல்களுக்கு குறைந்தபட்சம் 10 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 5 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டையும் சேர்த்து அனுபவிக்கும் விதமாக குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் அரசாங்கத்தினால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடிய பொய்யான செய்திகளைப் பரப்புவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கத்தக்க வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தமொன்றைக் கொண்டுவருமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பான குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதற்கமைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பதிலமைச்சராகத் தொழிற்படும் பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தமொன்றுக்கான முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனவே நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்பும் நபருக்கு குறைந்தது 10 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 5 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டணை அல்லது அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டையும் அனுபவிக்க நேரும் வகையில் தண்டனை வழங்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!