சோபா உடன்பாட்டினால் சிறிலங்கா பிளவுபடும் – உதய கம்மன்பில

அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம் போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக சிறிலங்கா மாறி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான மிலேனியம் சவால் நிதிய ஒத்துழைப்பு உடன்பாடு ஒரு பொருளாதார தாழ்வாரத்தை உருவாக்கி விடும்.

அது பனாமா கால்வாயைப் போன்று சிறிலங்காவைப் பிளவுபடுத்தி விடும்.

அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் போன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுகிறார்.

சபாநாயகருக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசகருக்கு, அமெரிக்க நிறுவனம் ஊதியம் வழங்குகிறது. அதனை சபாநாயகர் ஏற்றக் கொண்டிருக்கிறார்.

இது, அவருக்கும் அமெரிக்காவுக்கும் இரகசியத் தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!