போதையில் கிணற்றுக்குள் விழுந்து கிடந்து விடிய விடிய தவித்த தொழிலாளி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நேரு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது அறந்தாங்கி அக்ரஹாரம் தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றின் தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அது போல் நேற்றிரவு அவர் கிணற்றின் தடுப்புசுவரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். போதை தலைக்கேறவே, திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 80அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 20அடி வரை தண்ணீர் இருந்தது. தண்ணீருக்குள் விழுந்த அவர், தன்னை காப்பாற்றும்படி கூக்குரலிட்டார். இருப்பினும் இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. மேலும் ராஜா எழுப்பிய சத்தமும் அந்த பகுதியில் யாருக்கும் கேட்கவில்லை.

தண்ணீரில் மூழ்கியதால் போதை தெளிந்த அவர் ஒரு வழியாக போராடி கிணற்றில் இருந்த கல்லில் ஏறி அமர்ந்தார். தன்னை யாரும் காப்பாற்ற வராததால் என்னசெய்வதென்று தெரியாமல் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை கல்லிலேயே தூங்காமல் அமர்ந்திருந்தார். இன்று அதிகாலை விடிந்ததும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால் ராஜா மீண்டும் சத்தம் போட்டு பொதுமக்களை அழைத்தார்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள், உடனே கிணற்றுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கிணற்றுக்குள் உள்ள கல்லில் ராஜா அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு அவரை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 80 அடி ஆழ கிணறு என்பதால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் கயிறு மூலம் அவரை மீட்பதற்கான முயற்சி நடந்தது. ஆனால் அதில் சிக்கல் ஏற்படவே, ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றப்பிறகு ராஜா வீடு திரும்பினார். போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!