பெருமளவு இந்துக்களும், பௌத்தர்களும் திருமணத்தினூடாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் – அத்துரலியே ரத்ன தேரர்

நாட்டிலுள்ள பெருமளவான இந்துக்களும், பௌத்தர்களும் திருமணத்தின் ஊடாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்திருக்கிறார்.

மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

திருமணத்தின் ஊடாக சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்துக்களும், பௌத்தர்களும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் முதுகெலும்பு உள்ள அரசாங்கம் முதலில் 18 வயதிற்கு உட்பட்ட திருமணம் சட்டத்திற்கு புறம்பானது என்ற அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த சட்டமூலம் ஒன்றை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.

மேலும் மத்ரஸா பாடசாலைகளில் அராபிய மொழியும், இஸ்லாமும் மாத்திரமே கற்பிக்கப்படுகின்றன. ஏனைய மொழிகளோ அல்லது கணிதம், விஞ்ஞானம், வரலாறு போன்ற பாடங்களோ அங்கு கற்பிக்கப்படுவதில்லை.எனவே இத்தகைய பாடசாலைகளைத் தடை செய்யவதற்கான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கும் தயாராகி வருகிறோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!