ஆக்ரா அருகே கோர விபத்தில் 29 பேர் பலி!

ஆக்ரா அருகே அதிவிரைவுச் சாலையில் சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து 29 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும் வகையில் 165 கிலோ மீட்டர் தூரத்திற்கு யமுனா அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லக்னோவில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஒன்று டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆக்ரா அருகே தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 15 அடி கால்வாயில் உருண்டது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 29 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தின் ஓட்டுநர் அதிகாலை நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!