மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய மாடல் அழகி: 100 மணி நேரம் சமூக சேவை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பலாத்காரத்துக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி, அடவ் மார்ன்யங், மெல்போர்னில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவர் அதீத மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டதோடு, விமான ஊழியர்களை தாக்கி, ஆபாசமாக நடந்துகொண்டார். இது தொடர்பாக அடவ் மார்ன்யங் மீது வழக்கு தொடரப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக அடவ் மார்ன்யங் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, அவர் மதுபோதையால் தன் சுய குணாதிசயங்களை இழந்து, மிக மோசமாக நடந்துகொண்டதாக கண்ணீர் மல்க கூறி வருத்தம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அவருக்கு 100 மணி நேர சமூக சேவை, 3 ஆண்டுகள் நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு மற்றும் குடிபோதையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனையும் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!