நகை வியாபாரியிடம் போலீஸ் சீருடையில் நூதன கொள்ளை!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாக்கால ரயில் நிலையத்தில் போலீஸ்காரர் உடையில் வந்து, நகை வியாபாரியிடம் ஒருகிலோ தங்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோயமுத்தூரில் இருந்து வந்த ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்த மாதம் 11ம் தேதி, பாக்கால ரயில் நிலையம் வந்த தங்க வியாபாரி முகுந்தராஜனிடம், போலீசார் உடையில் சோதனையிட்ட இருவர் கள்ளத்தனமாக தங்க வியாபாரம் செய்வதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.

ரயிலில் இருந்து அவரை கீழே இறக்கி ரயில்வே காலனிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், முகுந்தராஜனிடம் இருந்து ஒரு கிலோ 80 கிராம் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டனர். உரிய ஆவணங்களை எடுத்து வந்து சித்தூர் முதலாவது காவல்நிலையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு அவர்கள் சென்று விட்டனர்.

சித்தூர் காவல்நிலையத்திற்கு சென்று முகுந்தன் விசாரித்தபோது, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து ரேணிகுண்டா போலீஸாரிடம் அவர் புகார் அளிக்க ,கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டனர். இதில், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த தங்க வியாபாரியான சேகர் என்பவர் சிக்கினார்.

பலநாட்களாக முகுந்தனை நோட்டமிட்ட சேகர், ராணுவத்தில் பணிபுரியும் புல்லா ரெட்டி என்பவருக்கும், பிரசாத் என்பவருக்கும் காவல் சீருடை அணிவித்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது. இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த ரேணிகுண்டா போலீசார் தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்திய சீருடைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!