கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் :விஷேட குழு அமைத்து தீர்வு காண்போம் – ஜனாதிபதி உறுதி

கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியுடன் தமிழ் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கன்னியா பிள்ளையார் கோவில் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விஷேட குழுவொன்றை அமைத்து அந்த குழுவின் அறிக்கையின் படி தீர்மானமொன்றை எடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீருற்றுப் பகுதி வளாகத்தில் வளாகத்திலுள்ள பழமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக கடந்த செவ்வாய்கிழமை (16) அப்பகுதில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு அந்த பிரதேசத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ் பிரதிநிதிகள் அவசரமாக இன்று ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின் போதே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன் போது திருகோணமலை மாத்திரமின்றி மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு தொல்பொருள் ஆலோசனை சபையில் சேவையாற்றுகின்ற 32 அதிகாரிகளும் பெரும்பாண்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்றும், இங்கு குறைந்தது 5 தமிழ் அதிகாரிகளாவது நியமிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கனேஷன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் கோவில் பகுதிக்கு செல்வதற்கு அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தடையை உடனடியாக நீக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!