அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்க தனிநபர் பிரேரணை

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை ஒழிப்பதற்கான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை நாட்டில் இருக்கும் வரையில், அதிபராகவும், பிரதமராகவும் சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் கூட, அவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது.

எனவே நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அது நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

நிறைவேற்று அதிகார அதிபர்களாக பதவியேற்ற எவருமே அதனை ஒழிக்கவில்லை. இந்தப் பதவி ஒழிக்கப்படாததன் விளைவாகவே நாட்டில் இப்போது, இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கப் போவதாக ஊக்கமளித்த ஜேவிபி இப்போது அமைதியாக உள்ளது.

உண்மையிலேயே ஜேவிபி ஆர்வமாக இருந்திருந்தால், நிறைவேற்று அதிபர் பதவியை ஒழிப்பதற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரரேரணையை நிறைவேற்றியிருக்கலாம்.

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிக்க நான் நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளேன்” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!