பொறுத்திருந்து பாருங்கள் – குமார வெல்கம சவால்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கொலன்னாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய கட்சி அலுவலகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த குமார வெல்கம

சுதந்திரக்கட்சி மக்களாட்சிக்கு எதிராக செயற்பட முனைந்தமையாலேயே நான் வெளியேறினேன். ஆனால் மீண்டும் சுதந்திரக்கட்சி, சரியான பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இருக்கின்றமை பெருமைப்பட வேண்டிய விடயமாகும். ஆகையால்தான் சுதந்திரக் கட்சியை வெற்றியடைய செய்ய வேண்டுமென்ற நோக்கில் தற்போது கட்சிக்குள் திரும்பி வந்துள்ளேன்.

நான் தாமரை மொட்டுக் கட்சியை அமைப்பதற்கு கடுமையாக பாடுபட்டுள்ளேன். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நானுமே இக்கட்சிக்காக அதிக சேவையாற்றியுள்ளளேன்.அதற்காக மொட்டுக் கட்சி உறுப்பினராகப் போவதில்லை. மேலும் ஒருசிலர் அக்கட்சியுடன் தற்போது இணைந்துள்ளனர்.ஆனால் நான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவனாகவே எப்போதும் இருப்பேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது மிகவும் சிறந்த கட்சியாகும். யார் நினைத்தாலும் இந்த கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது. அத்துடன் சுதந்திரக் கட்சி இல்லாமல் யாராலும் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது. அந்தவகையில் எமது கட்சி முன்நோக்கி நகர்வுகளை மேற்கொள்ளும்போது எத்தனை கட்சிகள் எம்முடன் இணைந்து கொள்கின்றன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என குமார வெல்கம சவால் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!