கற்பழிப்பு வழக்கில் கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை தூக்கில் போட டெல்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தல்!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. சிறுமி காவல் நிலையம் சென்று நியாயம் கிடைக்காத காரணத்தினால் யோகி ஆதித்யநாத் வீடு முன்னதாக தீ குளிக்க முயன்றார். இதனையடுத்து 2018 ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது. இதன்பின் கடந்த வருடம் ஏப்ரல் 13ந்தேதி செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து வருகிறார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் நேற்று சிறுமி சென்ற கார் ரேபரேலியில் விபத்துக்குள் சிக்கியது. இதில் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் சென்ற இரு உறவுக்கார பெண்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் ரேபரேலி சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற போது சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுபற்றி டெல்லி மகளிர் ஆணைய தலைவியான சுவாதி மாலிவல் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர் மற்றும் மருத்துவர்களை நான் சந்தித்தேன். அவர்கள் இருவரும் சிக்கலான நிலையில் உள்ளனர். உயிர்பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறி விட்டனர். டெல்லியில் உள்ள சிறந்த மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவரது குடும்பமும் இதனையே விரும்புகிறது. மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுபற்றி பேசியுள்ளேன். இதற்கான பொறுப்பினை நாங்கள் ஏற்போம் என்று தெரிவித்து உள்ளார்.

யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து ஒருவரும் பாதிப்படைந்த பெண்ணை காண வரவில்லை என குற்றச்சாட்டாக கூறியுள்ள அவர், யோகியின் பெயரை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டி.ஜி.பி. இது ஒரு விபத்து என கூறியுள்ளார். யோகி, நீங்கள் மருத்துவமனைக்கு வாருங்கள். செங்காரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட வேண்டும். செங்கார் 15 நாட்களில் தூக்கிலிடப்பட வேண்டும். அவரை விட்டு விட்டால், நாட்டிலுள்ள பல நிர்பயாக்கள் மனமுடைந்து போய் விடுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!