ஐதேகவில் நான்கு அதிபர் வேட்பாளர்கள்

வரும் அதிபர் தேர்தலில் ஐதேகவின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று கருதப்படுவோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

ஐதேகவின் அதிபர் வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்பார்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு சார்பான அணிகளும் ஐதேகவுக்குள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நான்காவதாக, இன்னொருவரும் ஐதேகவின் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் பட்டியலில் இருப்பதாக அலரி மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் தகவல் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“கட்சிக்குள் நான்கு தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர். எமது வேட்பாளர் யார் என்ற இறுதி முடிவு பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்.

பொதுஜன பெரமுன இன்னமும் தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனவே ஐதேகவும் வேட்பாளரை அறிவிக்க அவசரப்படாது.

பொதுஜன பெரமுனவினர் வேட்பாளரை அறிவித்ததும் நாமும் எமது வேட்பாளரை அறிவிப்போம்.

கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவித்தால், நாமும் பொருத்தமானவரை அறிவிப்போம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் ஐதேகவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர். அவர்களில் ஒருவர் அனுராதபுர மாவட்டத்தில் பலம் வாய்ந்தவர்” என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!