மகன்கள் பயங்கரவாதியாவதை தாய்மார்கள்தான் தடுக்க வேண்டும்… இந்திய ராணுவம் அறிவுரை!

இந்திய ராணுவம் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தடுக்கும் விதமாக ஸ்திரமான நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்திய விமானப்படையின் எல்லைத் தாண்டிய தாக்குதலால் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் பயங்கரவாதிகளின் செயல் காஷ்மீரில் காணப்பட்டு வருகிறது. மாநிலத்தில் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் சக்திகளை அடையாளம் கண்டு ஒடுக்கும் பணியில் தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் உளவுப்பிரிவு நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்நிலையில் உங்கள் மகன்கள் பயங்கரவாதிகளாவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும் என காஷ்மீரில் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சக்திகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் கலந்துக்கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் அம்மாநில தாய்மார்களுக்கு முக்கியமான கோரிக்கை விடுத்துள்ளனர். பெற்றோர்களை எச்சரித்த பாதுகாப்பு படையினர், ரூ.500-க்கு கற்களை வீசத் தொடங்கும் இளைஞர்களில் 83% பேர் துப்பாக்கியை எடுப்பதுடன் வாழ்க்கையை முடிக்கிறார்கள். எனவே, இதனை நீங்கள்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பெற்றோர்களுக்கு மேலும் அதிர்ச்சிகரமான தகவலை பதிவு செய்த பாதுகாப்பு படை, வழிதவறிய இளைஞர்களின் முடிவு என்ன என்பது தொடர்பான புள்ளிவிபரங்களையும் வழங்கினர். பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து துப்பாக்கி எடுக்கும் இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் முதல் வருடத்திலே அழிக்கப்படுகிறார்கள். வழிதவறிய சிறுவர்கள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கிறோம், நடவடிக்கையையும் எடுக்கிறோம். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இளைஞர்களை ஊக்குவிக்கிறோம். “ஆயுதம் ஏந்தும் ஒரு பயங்கரவாதியின் வாழ்க்கை மிகவும் குறுகியதாக இருக்கிறது” என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!