கோத்தாவை தமிழ் மக்கள் விரோதியாகவே பார்க்கின்றனர்!

கோத்தபாய ராஜபக்ச தமிழ் மக்களால் விரோதியாகவே பார்க்கப்படுகின்றார் என, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் ரெலோ முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த நாட்டில் தமிழர்கள் சிங்கள தலைவர்களை நம்பி ஏமாந்த வரலாறே காணப்படுகின்றது. இறுதியாக 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஒட்டுமொத்த சிறுபான்மையினமும் ஜனாதிபதியாக்கி இன்று அவரை நம்பி ஏமாந்த நிலையில் இருக்கின்றோம். இன்னுமொரு தடவை சிங்கள தலைமைகளை நம்பி ஏமாற வேண்டிய நிலையில் நாங்களும் இல்லை, தமிழ் மக்களும் இல்லை. அதற்காக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் நிலையும் இல்லை.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த காரணத்தினால் தமிழ் மக்கள் என்ன கஸ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை நாங்கள் உணரவேண்டும். தமிழர்கள் தங்களது வாக்குகளை இந்த நாட்டில் ஜனாதிபதியாக வருபவருக்கு இனிமேல் வழங்க வேண்டுமாகவிருந்தால் அவரிடமிருந்து உறுதியான உறுதிமொழியொன்று வடகிழக்கு தமிழ் மக்கள் தொடர்பாக உண்மையான கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாட்டின் மத்தியஸ்ததுடன் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கி அதன் மூலம் உறுதிமொழி வழங்கப்படுவதன் ஊடாகவே ஒரு தலைவரை நாங்கள் ஆதரிக்கலாம்.

வேட்பாளர்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளியிடப்படும்போது அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பான விடயங்களை கருத்தில்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யக்கூடிய ஒருவரை தெரிவுசெய்ய வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாக இருக்கவேண்டும் என நான் கருதுகின்றேன்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கோத்தாபயவை தமிழ் மக்களின் விரோதி என்ற வகையிலேயே குறிப்பிட்டளவிலான தமிழ் மக்கள் பார்க்கின்றனர். முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் அவர் என்பதை இன்னும் தமிழ் மக்கள் மறக்கவில்லை.

இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் கடந்த கால இழப்பிற்கும் எமக்கு செய்யப்பட்ட அநியாயத்திற்கான நியாயத்தினையும் இந்த நாட்டில் இனியொரு அழிவு, போராட்டம் இடம்பெறாமல் இருப்பதற்கும் வடகிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளரை பரிசீலனை செய்யவேண்டும்.

அதனை விடுத்து தனிப்பட்ட ஒரு வேட்பாளருக்காக தனிப்பட்ட ஒருவரின் அபிலாசைகளுக்காக நாங்கள் செயற்படக்கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். அவ்வாறான எந்த முரண்பாடுகளும் இல்லையென்பதே எனது கருத்து’ என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!