உத்தரபிரதேசத்தில் மருத்துவமனை வராண்டாவில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்!

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால், கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனை வராண்டாவில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரூக்காபாத்திலுள்ள ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி பெண்ணை, போதிய படுக்கைகள் இல்லை எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்களும், ஊழியர்களும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிரசவ வலியில் துடித்த அந்த பெண் மருத்துவமனை வராந்தாவிலேயே அங்கிருந்தவர்கள் முன்னிலையில் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்களுள் ஒருவர் அதனை வீடியோ எடுத்து செய்தியாளர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோ பரவிய நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த பரூக்காபாத் மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு மருத்துவர்கள், ஊழியர்களின் அலட்சியப் போக்கே காரணம் என தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண், குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மருத்துவர்கள் அவரை பிரசவ வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!